பிராமணர்கள் தமிழர்களா? பிராமணர்களை வந்தேறிகள் என்கிறார்களே அதன் உண்மைத்தன்மை என்ன?
இப்படி ஒரு தலைப்பே அவசியமில்லை எனினும் தற்கால சூழலில் ஒருசில அதிமேதாவிகளுக்காக இதை தெளிவுபடுத்துவதும் அவசியமாகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் துணை அதிபராக வெற்றிபெற்ற கமலா ஹாரிஸை தமிழர் ஏன்றும் அந்நியர் என்றும் ஓடிக்கொண்டிருந்த ஒரு விவாதத்தில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒருவர் பிராமணர்கள் தமிழரில்லை என்ற வாதத்தை வைத்தார். அவரின் பின்னூட்டத்திற்கு பல மறுப்புகள் வந்தாலும் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் கூட பிராமணர்களை தமிழரில்லை என்று மறைமுகமாக எழுதுவதை அவ்வப்போது காண்கிறேன்…!
இந்த வாதங்களை வைப்பவர்களின் முக்கிய நோக்கம் தமிழர்களின் வழிபாட்டு முறைகளை ஒழிக்க வேண்டும் என்பதாகும். இதற்கு முதலில் சமஸ்கிருத எதிர்ப்பில் தொடங்கி ஆரிய இனவாத கோட்பாட்டை தூக்கி பிடித்து அதன் இறுதியாக பிராமணர்களை தமிழர்களில்லை என்ற வாதத்தை முன்வைத்து சிறுக சிறுக கோயில்களை விட்டு அவர்களை அகற்றுவதே நோக்கம் என்பது வெளிப்படை..!
இதுபோன்ற கூற்றுகளை நாம் எதிர்த்து கேள்வி கேட்டால் தமிழ் பிராமணர், ஆரிய பிராமணர் என்று பிரித்துவிடுவார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் தமிழை தாய்மொழியாக கொண்ட பிராமணர்கள், மற்றும் இந்தியாவின் மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட பிராமணர்கள் என்ற புரிதலில் கூட அவர்களின் வார்த்தைகள் இருக்காது. ஆனால் தமிழ் பிராமணர்கள் என்றொரு பிரிவை பிரித்து மற்றவர்களை வந்தேறிகளாக கூறுவர். இதற்கு ஆதாரமாக மேக்ஸ் மில்லர் டோனி ஜோசப் போன்றோர் கட்டி விட்ட Aryan Invention தியரியை தூக்கிகாகிட்டு வருவார்கள். ஆனால் இவர்கள் ஒன்றை அறிவதில்லை. இந்த தியரியை ஆதி இந்தியர்கள் என்ற நூலின் மூலம் உலகம் முழுவதும் பரப்புரை செய்த டோனி ஜோசப் இந்தியர்களையும் வந்தேறிகள் என்றுதான் குறிக்கிறார். இதுபற்றி ஏற்கனவே பலமுறை பார்த்துவிட்டதால், பிராமணர்கள் தமிழர்களா என்ற வாதங்களில் இருக்கும் உண்மைத்தன்மையை பார்க்கலாம்…!
நமக்கு இன்று தமிழுக்காக கிடைக்கும் காலத்தால் மூத்த பெரும்பான்மையான இலக்கியங்கள் பிராமணர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறைகளை பற்றியும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் அவற்றில் ஒன்றுகூட பிராமணர்கள் அந்நியர்கள் என்றோ இவர்கள் தமிழரில்லை என்றோ கூறவில்லை. மாறாக பிராமணர்கள் இம்மண்ணின் தொல்குடி மரபை சேர்ந்தவர்கள் என்றே பறைசாற்றுகிறது. அதாவது இம்மண்ணின் பழமையான பூர்வ குடியினர் என்பது பொருளாகும். ஆனால் தொல்காப்பியர், திருவள்ளுவர், நக்கீரர், அருணகிரிநாதர் முதலான தமிழ்க் கவிகள் அறியாததை இவர்கள் அறிந்து விட்டார்களா? என்ன? இந்த வாதம் முதன் முதலாக ஆங்கிலேயர் வருகைக்கு பிற்பாடுகளில் தான் நடக்கிறது. ஆக அதற்கு முந்தைய இலக்கிய, கல்வெட்டு சான்றுகளில் எதாவது பிராமணர்களை தமிழரில்லை என்றோ அந்நியர்கள் என்றோ குறிக்கும் சான்றுகள் உள்ளதா என்பதை பார்க்கலாம். உதாரணமாக,
“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்”
– தொல்காப்பியம்.
இந்த தொல்காப்பிய சூத்திரத்துக்கு உரை எழுதிய தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான இளம்பூரணர் “அறுவகைப்பட்ட பார்ப்பனர்” என்ற வரிகளுக்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பவை பிராமணர்களின் தொழில்கள் என்று குறிப்பிடுகிறார். இதற்கு பல இலக்கிய மேற்கோள்களையும் உடன் வைக்கிறார். முதலில் இங்கே கூறப்பட்ட பிராமணர்களுக்கான ஆறு தொழில்காளாக இளம்பூரணர் கூறுவதை பிங்கல நிகண்டின் வழியாக கண்டால்,
பிங்கல நிகண்டு : அந்தணர்களின் ஆறு தொழில்களின் பட்டியலில் : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் போன்ற தொழில்களையே குறிப்பிட்டுள்ளார் பிங்கல முனிவர். இதற்கு இலக்கிய சான்றாக,
திருக்குறள் : “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்”
விளக்கம் : நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; ஆறு தொழிலகளை உடைய அந்தணரும் அறநூல்களை(வேதம்) மறப்பர். (மணக்குடவர் உரை) மேலே குறிப்பிட்ட குறள் கூறும் வேதம் ஓதுவது முதலான ஆறு தொழிலோனையே திருமந்திரமும் அந்தணன் என்று குறிப்பிடுகிறது. அதாவது,
திருமந்திரம் : “அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தம நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே”
இதையே சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தும் வலியுறுத்துவதோடு அந்தணர்களுக்கு உரிய ஆறு தொழில்கள் என்னவென்ன என்பதையும் அழகாக வகைப்படுத்துகிறது. இது நிகண்டுகளுக்கும் காலத்தால் மூத்த சான்றாகும்,
பதிற்றுப்பத்து : “நெடு வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு புலி உறை கழித்த புலவு வாய் எஃகம் ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் பீடு கொள் மாலை பெரும் படை தலைவ ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ”
விளக்கம் : நீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
உன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே! மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று நாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட – மேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
ஆக இதிலிருந்து இளம்பூரணர் கூறும் பிராமணர்கள் என்போர் , வேதம் ஓதுவது முதலான ஆறு தொழில்களை உடையவர்களே என்பதை மேற்கூறிய திருக்குறள், பிங்கல நிகண்டு, மற்றும் பதிற்றுப்பத்து வரிகளின் மூலம் அறியலாம்..!
நிற்க
இங்கே அந்தணர் வேறு பிராமணர் வேறு என்றொரு வாதம் எழும். அதை விளக்கும் வகையில் நான் மேற்கூறிய பிங்கல நிகண்டில் ஆடவர் வகை எனும் பிரிவில் பார்ப்பனர்களுக்கு உரிய பெயர்களாக சிலவற்றை கூறுகிறது. அவையாவன,
நிகண்டு :அறவோர், அறுதொழிலோர், வேதம் ஓதும் அந்தணர், இரு பிறப்பாளர், மறையோர் என்று பல பெயர்களை சுட்டுகிறது. இதிலிருந்து திருக்குறள் போற்றும் அந்தணர், அறுதொழிலோன், பார்ப்பான் என்ற சொல்லாடல்கள் வேதம் ஓதுவது முதலான ஆறு தொழில்களை உடையவர்களையே குறிக்கும் என்பதை நான் மேற்கூறிய சங்ககால புலவர்களின் பாடல்கள் மூலமும், திருமந்திரத்தின் மூலமும் தெளிவாக அறியலாம்..!
சிலப்பதிகாரம் : “வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச் செந்நிறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப் பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற் காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து தேவந் திகையைத் தீவலஞ் செய்து”
என்ற சிலப்பதிகார வரிகள் பார்ப்பனர்களை பண்டைத் தாய் பால் காப்பியத் தொல் குடியினர் என்று வரையறுக்கிறது. ஆனால் இங்கே இளங்கோவடிகள் பிராமணர்களை தமிழரில்லை என்றோ அந்நியர்கள் என்றோ ஆரியர்கள் என்றோ குறிப்பிடவில்லை என்பதை காண்க. இதை நக்கீரரின் கவிநயத்தில் பார்த்தோமேயானால், ஏரகத்தில் அந்தணர்கள் செய்யும் வழிபாடு பற்றி விளக்கும் நக்கீரர் இப்பாடலில் அரிய விஷயங்களைச் சொல்கிறார். அவையாவன,
திருமுருகாற்றுப்படை :”இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர் உடீஇ உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரைஉறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன்”
நான் மேற்கூறிய அனைத்தையும் இந்த ஒரு பாடலில் சொல்லியிருப்பார் நக்கீரர். இதை தனித்தனியாக விரிவாக காண்போம்.
இருமூன்று எய்திய இயல்பு : இருமூன்று என்றால் நான் மேற்கூறிய ஆறு தொழிலகளை உடைய 2*3 அதாவது ஓதல், ஓதுவித்தல், வேட்டல்,வேட்பித்தல், ஏற்றல், ஈதல்’. ஆகிய அறுவகைப் பணிகளை நிறைவேற்றும் பண்புடையவர்கள்.
இருவர்ச்சுட்டிய தொல்குடி : தாயும், தந்தையும் ஆகிய இருவரின் பழமையான தொல் குலத்தின் அல்லது குடும்பத்தின் நற்பெயரைப் புகழ்ந்து கூறியவர்கள்.
அறு-நான்கு இரட்டி இளமை நல் யாண்டு : 6×4 + 6×4 = 48 ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலத்தை உடையவர்கள்.
முத்தீ :ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்’ என்னும் மூவகை வேள்வித் தீகளை வளர்ப்பவர்கள்.
இருபிறப்பாளர் : இயற்கைப் பிறப்பு, அறிவு முதிர்ச்சியின் பின்னர் எய்தும் மறு பிறப்பு ஆகிய இரு பிறப்புகளுக்குரிய அந்தணர்கள். இதைத்தான் நிகண்டுகளும் சொல்கின்றன.
பொழுது அறிந்து நுவல : நல்ல நேரத்தை கணித்துத் தெரிவிப்பவர்கள்.
ஒன்பதுகொண்ட மூன்று புரி நுண்ஞாண் : அதாவது ஒவ்வொரு புரியிலும் மூன்று இழைகளைக்கொண்ட மூன்று புரிகளாலாகிய ஒன்பது இழைகளைக்கொண்ட பூணூலை தரித்தவர்கள்.
புலராக் காழகம் புலர உடீஇ : உலராத ஆடையை உலரும்படி உடுத்தியவர்கள்.
உச்சிக்கூப்பிய கையினர் : தலை உச்சி மீது இரு கைகளையும் குவித்து வணங்குபவர்கள்.
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி : “சரவணபவ” அல்லது “குமாராயநம” என்னும் ஆறு எழுத்துகள் அடங்கிய மந்திரத்தை ஓதுபவர்கள்.
விரைவுறு நறுமலர் ஏந்தி : நறுமணம் உடைய மலர்களைத் தூவி வழிபடுபவர்கள்.
பெரிது உவந்து : மிகவும் மகிழ்ச்சியாக இதை செய்பவர்கள்.
ஏரகத்து உறைதலும் உரியன் : திரு ஏரகத்தில் அமர்ந்திருக்கும் உரிமையுடைய திருமுருகப்பெருமானை வணங்குபவர்கள்.
ஆக நக்கீரர் பிராமணர்களைப்பற்றிய அனைத்து அவதூறுகளுக்கும் செப்பல் ஷாட் கொடுக்கிறார் என்றே கூற வேண்டும்.இதையெல்லாம் படித்திருந்தாலும் இந்த போராளிகள் திருந்தப்போவதில்லை….!
அடுத்ததாக, இங்கு திருக்குறள் மோகம் அதிகரித்து விட்டதால் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் பிராமணர்களை தமிழரில்லை என்று கூறினாரா? என்று பார்ககலாம். உதாரணமாக,
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”
இந்த குறளுக்கு உரை எழுதிய மிக மூத்த சமண முனியான மணக்குடவரே பார்ப்பான் என்பது பிராமணரையும், ஓதல் என்பது வேதத்தையும் தான் குறிக்கிறது என்று உரை வகுக்கிறார். ஆனால் தற்கால வரலாற்று திரிபாளர்கள் தரும் விளக்கங்களை பார்த்தால் சிரிப்பு தான் வரும். முக்கியமாக கலைஞர் உரை. ஆக திருவள்ளுவரே பிராமணர்களின் ஒழுக்கம் பற்றி பேசும் இடத்தில் அவர்களை ஆரியர்கள் என்றோ தமிழரில்லை என்றோ அந்நியர்கள் என்றோ குறிப்பிடவில்லை என்பதை காண்க….!
இன்று பெரும்பான்மை மக்கள் தூக்கி பிடிக்கும் தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் போன்ற இலக்கியங்களிலேயே பார்ப்பான் என்ற சொல் பயின்று வரும்போதும், அம்மகான்கள் பார்ப்பனர்களை அந்நியர்கள் என்றோ தமிழரில்லை என்றோ குறிக்காதபோது இன்றைய ஆராய்ச்சியாளர்களும் சில அரசியல் கட்சியின் மூத்த பிரமுகர்களும் குதிப்பதன் நோக்கத்தையும் நாம் சிந்திக்க வேண்டும்….!
இன்றைய காலத்தில் பிராமடர்கள் பூஜை மட்டும் தான் செய்கிறார்களா? ஒன்றால் எனது பதில் இல்லை என்பதாகும். பிராமணர்கள் வேதம் ஓதுவது தவிர்த்து மற்ற வேலைகளும் செய்துள்ளனர். இதை விளக்கும் வகையில் அகநானூற்றுப்பாடல் ஒன்று, வேதம் ஓதாது வேள்வி செய்யாத பிராமணர்களும் இருந்தனர் என்ற தகவலையும் தருகிறது. உதாரணமாக,
அகநானூறு : “வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன தளை பிணி அவிழா சுரி முகப் பகன்றை சிதரல் அம் துவலை தூவலின் மலரும்”
விளக்கம் : வேள்வியைச் செய்யாத பார்ப்பான் சங்கு வளையல் செய்வதற்காகச் சங்கினை அறுக்கிறான். சங்கின் முகப்பில் இருக்கிற கூம்பு போன்ற பகுதியை முதலில் அறுத்து ஒதுக்குகிறான். இந்தப் பகுதியே இங்கு சங்கின் கொழுந்து எனப்படுகிறது. கொழுந்து நீக்கிய பகுதியைத் தேவையான அகலத்தில் அறுத்தால் வட்டமான அமைப்பு கிடைக்கும். இதனை அரம் கொண்டு அராவிச் சீரான வடிவத்திற்குக் கொண்டுவரவேண்டும். இந்த அரம் சிம்புகளைத் தேய்த்துச் சரிசெய்து பளபளப்பாக்கும். இது தட்டையானது. ஆனால், சங்கை அறுப்பதற்கு பற்களை உடைய ஒரு அரிவாள் வேண்டும். இதனைக் கருக்கரிவாள் என்பர். இதனையே வாள் அரம் என்கிறார் புலவர். இங்கு பிராமணர்கள் வேதம் ஓதுவது தவிர்த்து வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அவர்களை புலவர் ஆவூர் மூலங்கிழார் தமிழரில்லை என்றோ ஆரியர்கள் என்றோ அந்நியர்கள் என்று குறிப்பிடவில்லை என்பதையும் காண்க….!
முற்காலங்களில் போர் நடைபெறும்போது பெண்களும் நாட்டின் செல்வங்களாக மதிக்கப்படும் பசுக்களும், பிராமணர்களையும் முதலில் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச்செல்லும் வழக்கம் இருந்ததை பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய நெட்டிமையார் குறிப்பிடுகிறார். உதாரணமாக,
புறநானூறு : “ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே”
விளக்கம் : பசுக்களும், பசுக்களின் இயல்பையுடைய பார்ப்பன இனத்தவர்களும் மகளிரையும், நோய் உடையோரையும் பாதுகாத்து தென் திசையில் வாழும் அவரவர் குடியில் இறந்தோர்க்குச் செய்ய வேண்டிய பிண்டோதகக் (பிண்டம் – சோறு, உதகம் – நீர்) கிரியை செய்யும் பொன்போன்ற தங்கமான பிள்ளையைப் பெறாத மணமக்களும் எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்தும் போது நீங்கள் உங்களுக்குப் பாதுகாப்பான இடம் தேடிச் செல்லுங்கள் என்று அறநெறியைச் சொல்லும் கொள்கையுடையவன் என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாராட்டிப் பாடுகிறார். இங்கும் பிராமடர்களை தன் நாட்டு மக்களாக அதுவும் பாதுகாக்கும் பொக்கிஷங்களாகத்தான் கருதியுள்ளனரே அன்றி தமிழரில்லை என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை….!
அடுத்ததாக குறுந்தொகை பாடல் ஒன்று பிராமணர்கள் வேதங்களை மனனம் செய்யும் திறன் படைத்தவர்கள் என்பதையும், உணவுகளில் கட்டுப்பாடு உடையவர்கள் என்பதையும் காட்டுகிறது. ஆனால் அப்பாடலில் கூட பிராமணர்கள் தமிழரில்லை என்றோ ஆரியர்கள் என்றோ குறிப்பிட்டவில்லை.
குறுந்தொகை : “பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! செம்பூ முருக்கின் நல்நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே! எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ? மயலோ இதுவே”
விளக்கம் :பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
தண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன் நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே! எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில் பிரிந்தவரைச் சேர்த்துவிக்கும் தன்மையுள்ள மருந்தும் இருக்கிறதோ? இது ஒரு மயக்க நிலையோ? என்று பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் ஒரு பிராமணரின் மகனைப்பார்த்து கேட்பதாக அமைந்த இப்பாடலில் கூட அவனை தமிழரில்லை என்றோ அந்நியன் என்றோ குறிப்பிடாதபோது தற்கால அறிவின் சிகாமணிகள் அவர்களை அந்நியர்கள் ஆக்க முயற்சிப்பதன் பின்னணிதான் என்ன?
இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலாக சிலப்பதிகாரத்தின் காவியத்தலைவனான கோவலனின் திருமணமே பாரப்பான் மறைவழிகாட்டத்தான் நடந்தது என்பதை இளங்கோவடிகள் பதிவு செய்யும்போது பிராமணர்கள் எப்படி அந்நியர்களாவார்கள்????
சிலப்பதிகாரம் : “முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன; முரை எழுந்தன பணிலம்; வெண்குடை அரசு எழுந்ததொர்படி எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது. மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து, நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ், வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன், மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட, தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை”
இது தவிர்த்து சோழர் கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பயின்று வரும் பிராமணர், சிவ பிராமணர் என்ற சொல்லாடல் எவ்விடத்திலும் தமிழரில்லை என்றோ அந்நியர்கள் என்றோ ஆரியர்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் பிராமணர்களை தமிழரில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்?
ஆரியர்கள் தான் பிராமணர்கள் என்ற நோக்கில் டோனி ஜோசபின் ஆதி இந்தியர்கள் என்ற நூலில் முதலில் இந்தியர்கள் இன்றைய இந்திய நிலப்பரப்பிற்கு குடியேறினார்கள் என்றும் இரண்டாவதாக ஆரியர்கள் குடியேறினார்கள் என்றும் குறிப்பிடுகையில் ஆரியர்களை மட்டும் வந்தேறிகள் என்று குறிப்பிடுவதன் நோக்கம் என்ன??? ஆக நமது வழிபாட்டு முறைகளை சிறிது சிறிதாக அப்புறப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஆயுதமே ஆரிய இனவாத கோட்பாடாகும். அதன் முதற்கட்ட பணி சமஸ்கிருத எதிர்ப்பு. இரண்டாவது பிராமணர்களை கோயிலை விட்டு அகற்றுவது. அதற்காகவே அவர்களை தமிழரில்லை என்ற அடிப்படை புரிதலற்ற வாதங்கள் இங்கு பரப்பப்படுகின்றன…!
ஆக அறிவார்ந்த தமிழ் சமூகமே நமக்கு கிடைக்கும் சான்றுகளின்படி சங்ககாலம் முதலே பிராமணர்கள் இருந்துள்ளனர். நமது முன்னோர்களான தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர் என பல மகான்கள் பிராமணர்களை ஏந்திப் பாடியுள்ளனர். ஆனால் அவர்கள் எவ்விடத்திலும் இவர்கள் அந்நியர்கள் என்றோ தமிழரில்லை என்றோ ஆரியர்கள் என்றோ குறிப்பிடவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்….!
.
Courtesy : Indhuvan